தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக (ராமதாஸ் தரப்பு) சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று (பிப்ரவரி 17) நேரில் சந்தித்துப் பேசினார்.

ஏற்கனவே பாமகவின் அன்புமணி ராமதாஸ் தரப்பு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து வருகிறது. தற்போது ராமதாஸ் தரப்பிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ராமதாஸின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் எம்.எல்.ஏ. அருள், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு அல்லது தேர்தல் கால ஒத்துழைப்பு குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இந்தச் சந்திப்பின் மூலம் ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.