2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜக-வின் வியூகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜக அமைப்பு ரீதியாக இன்னும் பலவீனமாகவே இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், தங்களுக்குத் தேவையான பலம் இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, தனித்துப் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதை விட, தமிழகத்தின் ‘பெரிய அண்ணனாக’ விளங்கும் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதே புத்திசாலித்தனம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் இந்த “பெரிய அண்ணன்” என்ற அடைமொழி, அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இது பாஜக-வின் பலவீனத்தைக் காட்டுகிறதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அதிமுக-வுடன் இணைந்திருப்பது தங்களுக்குக் கூடுதல் பலத்தைத் தரும் என்றும், இந்த மெகா கூட்டணிதான் வரும் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க நினைக்கும் பாஜக, தற்போது யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இறங்கி வந்திருப்பது, வரும் தேர்தலில் எத்தகைய மாற்றங்களை உருவாக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.