மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, செங்கோட்டையன் கட்சி மாறியது பற்றி கருத்துத் தெரிவித்தார். அவர், செங்கோட்டையன் விலகியது அ.தி.மு.க. என்னும் ஆலமரத்தில் இருந்து ஒரு பழுத்த இலை விழுவது போலத்தான் என்றும், ஒரு இலை உதிர்ந்ததால் மரம் சாய்ந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும் கூறினார்.

மேலும், மக்கள்  ஓட்டு போட்டது செங்கோட்டையனுக்காக அல்ல; இரட்டை இலைச் சின்னத்திற்காகவும், அ.தி.மு.க.வுக்காகவும்தான் என்று வலியுறுத்தினார்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, இப்போது மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் மட்டுமே முக்கிய இடத்தில் உள்ளனர் என்று செல்லூர் ராஜு குறிப்பிட்டார். நடிகர் விஜய் தன்னை முதல்வராக ஆக்குவதாகப் பேசுவது, ‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போலத்தான் என்றார்.

அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், கூட்டணி என்பது தோளில் போடப்பட்ட துண்டு போன்றது என்றும், கொள்கைகள் தனித்தனியாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை ராஜன் செல்லப்பா சந்தித்தது மனிதாபிமான அடிப்படையிலானது, இதில் அரசியல் இல்லை என்றும், தான் எந்த நிலைமையிலும் அ.தி.மு.க. வேட்டியை மாற்ற மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.