தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பள்ளிக்கு அருகே திறக்கப்பட்ட தனியார் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரிலான மதுபானப் பாரை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இதேபோன்று ஆயிரக்கணக்கான தனியார் மதுபானப் பார்களைத் திறக்க அரசு முயற்சிப்பதாகக் கண்டித்து, அரசு மதுபானக் கடைகளை மூடக் கோரியும் தவெக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்தப் பாருக்குள் புகுந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீசாரின் தடையை மீறி கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்ததால், போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.

இந்தத் தள்ளுமுள்ளுவின்போது, போராட்டக்காரர்களைத் தடுக்க முயன்ற மகேந்திரமங்கலம் போலீஸ் ஏட்டு அருள் என்பவரது கையை, தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காவலருக்குக் காயம் ஏற்படவில்லை.

இதன்பின்னர், பார் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதற்கிடையே, காவலரின் கையைக் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்தத் தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.