தஞ்சாவூரில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற அதிமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், பாலியல் கொடுமைகள் மற்றும் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களின் ஒரே நோக்கம் என்று தெரிவித்தார். கடந்த 2021 தேர்தலில் தாங்கள் பிரிந்து நின்றதால்தான் திமுக எளிதாக வெற்றி பெற்றதாகவும், தற்போது ஜெயலலிதாவின் பிள்ளைகள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமித் ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட பழைய கசப்புகளை மறந்து, எந்த நிபந்தனையுமின்றி மக்கள் நலனுக்காகவும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கவும் அதிமுகவுடன் கரம் கோர்த்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பதவிக்காகவும் பணத்திற்காகவும் திமுக பக்கம் சென்ற சில முன்னாள் அதிமுக நிர்வாகிகளை “நரி வேஷம்” போடுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.

உடல்நிலை சரியில்லாத காலத்திலும் பதவி வெறியால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா எதிர்த்த திமுகவிடம் தஞ்சமடைந்தவர்கள் தொண்டர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக அவர் சாடினார்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விலைவாசி உயர்வு மற்றும் ஊழலால் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறிய தினகரன், இந்த “கொடுங்கோல்” ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர அதிமுக கூட்டணி தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.