அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வரும் தேர்தல் அறிவிப்புகள் அனைத்தும் திமுக அரசின் சாதனைகளை காப்பியடித்தவை என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் உண்மையான கதாநாயகனாகத் திகழும். அறிவாலயம் வாசலில் காத்திருந்து திமுகவின் அறிக்கையை வாங்கி, அதனை அப்படியே நகலெடுத்து வெளியிடுவதுதான் அதிமுகவின் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்த முறை அதில் ஒரு விசித்திர மாற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர் செய்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ‘டூப்’ போட்டு அறிக்கை வெளியிடும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது பரிதாபத்திற்குரியது.

கடந்த 2021-ல் திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, நிதி நிலைமையைக் காரணம் காட்டி இவற்றை நிறைவேற்ற முடியாது என்றார். ஆனால், அவர் எதையெல்லாம் முடியாது என்று சொன்னாரோ, அவற்றை முதலமைச்சர் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

புதிதாகச் சிந்திக்கத் திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்களையே தனது அறிவிப்புகளாக அதிமுக வெளியிட்டு வருகிறது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் மீது நம்பிக்கை இல்லாததால், திமுகவின் சாதனைகளையே ரோல் மாடலாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

“எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவரும். அதுவரை உங்கள் மூளையை கசக்கிக் கொள்ள வேண்டாம். அறிக்கை வந்த பிறகு உங்கள் பழைய ஜெராக்ஸ் மிஷினில் அதனை நகலெடுத்துக் கொள்ளலாம்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது அறிக்கையில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.