தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தி.மு.க-வுக்கு எதிராக களமிறங்க தயாராகி வருகிறது. இந்நிலையில், அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த முக்கியத்துவம், ஓ.பன்னீர்செல்வத்தை (ஓ.பி.எஸ்) வெகுவாக பாதித்ததாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு அனுகூலமாக செயல்படும் பாஜக, தன்னை புறக்கணித்ததாக உணர்ந்த ஓ.பி.எஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து (NDA) வெளியேறினார். “அரசியலில் எனக்கென ஒரு சுயமரியாதை இருக்கிறது,” என்றார் ஓ.பி.எஸ்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “ஓ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டதாக எனக்கு தெரியவில்லை. என்னிடம் கேட்டிருந்தால், நேரம் வாங்கி கொடுத்திருப்பேன்.” இதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், “நயினார் சொல்வது பொய். நான் அவருக்கு ஆறு முறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை,” என்று கூறி, அதற்கான தொலைபேசி விவரங்களை ஆதாரமாக வெளியிட்டார்.

இதேவேளை, டிடிவி தினகரனும் NDA-வில் இருந்து விலகிய நிலையில், நயினார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். பாஜக ஓ.பி.எஸ்-ஐ இவ்வாறு நடத்தியிருப்பது தவறு என அவர் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வர பாஜக முயற்சி தொடங்கியுள்ளது. நயினார் நாகேந்திரன் நேரடியாக ஓ.பி.எஸ்-ஐ தொடர்பு கொண்டு பேசியதாகவும்,  “தி.மு.க-வுக்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டவேண்டும். அதற்காக நான் யாரிடமும் பேச தயாராக இருக்கிறேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணியில் இருந்து விலகியபோதும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓ.பி.எஸ் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால், ஓ.பி.எஸ் மீண்டும் NDA-வில் சேர வாய்ப்பு உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.