தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இன்று இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய x பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி திரு.இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை. தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் இமானுவேல் சேகரனார்  நினைவு தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என சர்ச்சை வெளியான நிலையில் தற்போது போட்டோவை வெளியிட்டு அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.