மதுரையில் நேற்று நடைபெற்ற  அரசியல் மாநாட்டில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்த பெண் தொகுப்பாளர், ‘‘செல்லூர் ராஜூவை வரவேற்க, சமூகத்தின் அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மேடைக்கு வருக’’ என மைக்கில் அழைப்பு விடுத்தார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த செல்லூர் ராஜூ, ‘‘நான் பேசலாமா?’’ என்று கூறியபடி, நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அவர் பேசுகையில்,
‘‘அ.தி.மு.க. என்று சொல்ல வேண்டாம். அண்ணா திமுக என்று சொல்லுங்கள். இன்று பல திமுக இருக்கிறது. ‘அதிமுக’ என்று சொன்னால் என்னவோ மாதிரி இருக்கிறது.

அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டில் அரசியல் இயக்கத்தை நடத்தியவர் அண்ணா. கட்சிக்கு ‘அண்ணா’ என்ற பெயரை எம்.ஜி.ஆர். வைத்தார். வருங்கால சந்ததிக்கு இது தெரியாமலே போய்விடும். அதனால், அண்ணா திமுக என்று சொல்லுங்கள். தொகுப்பாளர் அம்மா, கொஞ்சம் மன்னிச்சுக்குங்கம்மா’’ என்றார். இதனால் மாநாட்டு மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.