பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அந்த வகையில் ஊட்டியில் தற்போது மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது.

தி.மு.க. அரசு 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்த 511 வாக்குறுதிகளில், 50 கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்த தி.மு.க., தற்போது அவர்கள் உரிமைகளை கோரி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து அ.தி.மு.க. ஆட்சி முடிவடையும் வரை தமிழகத்தின் மொத்த கடன் ரூ.4¾ லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், தி.மு.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக இளைஞர்களில் 60 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் அது சாத்தியமாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு தி.மு.க. முதலில் செல்வதா, த.வெ.க. முதலில் செல்வதா என போட்டி போடுகின்றனர். ஆனால், பா.ஜனதாவை மதவாத கட்சி என விமர்சிக்கின்றனர்.

பிரதமர் மோடி தேவாலயத்திற்கு சென்று இரண்டு மணி நேரம் ஜெபத்தில் கலந்துகொண்டு, கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். எங்கள்மீது எத்தனை அவதூறுகள் வீசப்பட்டாலும், அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.