சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் பகுதியில், பாலியல் சீண்டல் புகார் அளித்த தனது அண்ணியை, கோபாலகிருஷ்ணனின் தம்பி பாலகிருஷ்ணன் அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தங்கரைத் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மனைவி தமிழரசி (35), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் கோபாலகிருஷ்ணன் சென்னையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கு வசிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணனின் தம்பிகளான பாலகிருஷ்ணன், முருகானந்தம் இருவரும் தமக்கு பாலியல் சீண்டல் செய்ததாக தமிழரசி சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முருகானந்தம் கைது செய்யப்பட்டார். ஆனால் பாலகிருஷ்ணன் மட்டும் தப்பி ஓடியார். பின்னர் முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்திற்கு முன் வெளியே வந்திருந்தார்.

நேற்று மாலை, ஃபுல் மப்பில் வீட்டில் இருந்த தமிழரசியுடன் பாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறு தீவிரமான நிலையில், அவர் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தமிழரசியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னரும் ஆத்திரத்தில் தலையை துண்டித்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து விரைந்த சிதம்பரம் தாலுகா போலீசார், தமிழரசியின் உடல் மற்றும் துண்டிக்கப்பட்ட தலையை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவத்துக்கு தொடர்புடைய வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகியுள்ள பாலகிருஷ்ணனைக் கைது செய்ய தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

மேலும் பட்டப்பகலில் அரிவாளால் தலையை துண்டித்து செய்யப்பட்ட இந்த கொடூரக் கொலை, சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.