மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தேகங்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாசுதேவ்பூரை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல்(26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வரக்கூடிய சாதாரண விவசாயத் தொழிலாளி தான் மண்டல். இந்நிலையில் மண்டலின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. வெறும் ரூ.17 மட்டுமே இருந்த மண்டலின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய் டெபாசிட் ஆகி இருக்கிறது.

எனினும் இதுகுறித்து மண்டலுக்கு எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் முகமது நசிருல்லா மண்டலுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக தேகங்காவிலுள்ள எஸ்பிஐ வங்கிக்கிளைக்கு நேரில் சென்று விளக்கமளிக்க வேண்டும் எனவும் வருகிற 30ஆம் தேதிக்குள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசைப் பார்த்தும் செய்வதறியாது குழம்பி போன மண்டல் பின் தனது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார். இதனிடையே மண்டலின் வங்கிக்கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது. நோட்டீசை தொடர்ந்து மண்டல் எஸ்பிஐ வங்கிக்கிளையில் ஆஜராகி விளக்கமளித்தார்.