விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும் ஒருவருக்கு, அட்லாண்டிக் பெருங்கடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்டமான பழுப்பு நிறப் பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற தோற்றம் தென்பட்டால், அது ஹாலிவுட் படத்தின் காட்சியாகத் தோன்றலாம். ஆனால், இது நிஜம்; இதைவிட ஆபத்தானது.

அதாவது ‘கிரேட் சர்காசம் பெல்ட்’ (Great Sargassum Belt) என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட கடல்பாசிப் படலம், தற்போது 5,500 மைல்கள் (சுமார் 8,851 கி.மீ) நீளத்திற்குப் பரவி, அட்லாண்டிக் பெருங்கடலின் அழகை மாற்றி அமைத்துள்ளது.

ஆப்பிரிக்கக் கடற்கரையிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை பரந்து விரிந்துள்ள இந்த ராட்சத கடல்பாசிக் கூட்டத்தை, விண்வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு பாம்பு போலக் காட்சியளிப்பதால், விமானிகள் இதை ‘லேட் ஸ்பில்’ (Latte Spill – காபி கொட்டியது போன்ற தோற்றம்) என்று அழைக்கின்றனர். ஒரு காலத்தில் நீல நிறமாக ஜொலித்த அட்லாண்டிக் பெருங்கடல், இன்று இந்த பாசிப்படலத்தால் பழுப்பு நிறச் சாயலைப் பெற்றுள்ளது.

புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 15 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பெரிய பாசிப்படலம் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. 40 ஆண்டுகால செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், 2011-ஆம் ஆண்டில் தான் இதன் ஆரம்பக்கட்ட வளர்ச்சியை முதன்முதலில் கண்டறிந்தனர். ஆனால், இன்று இதன் அளவு அமெரிக்காவின் அகலத்தைப் போல இருமடங்காக வளர்ந்து நிற்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் சுமார் 3.75 கோடி மெட்ரிக் டன் கடல்பாசி கடலில் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாசிப்படலத்தின் அதீத வளர்ச்சிக்கு மனிதச் செயல்பாடுகளே முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது  விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் ஆறுகள் வழியாகக் கடலில் கலப்பது பாசிக் கொழுக்கக் காரணமாகிறது. பெருவெள்ளத்தின் போது அமேசான் நதி அடித்து வரும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், இந்த பாசிகளுக்கு உரமாக அமைந்து, அவை வெறும் 11 நாட்களிலேயே தங்கள் பரப்பளவை இருமடங்காக்க உதவுகிறது.

நடுக்கடலில் இருக்கும்போது மீன்கள் மற்றும் ஆமைகளுக்கு இது ஒரு வாழ்விடமாக இருந்தாலும், கடற்கரையை நெருங்கும்போது இது பெரும் அச்சுறுத்தலாக மாறுகிறது: கரையை வந்தடைந்த பின் இந்த பாசி அழுகும்போது, ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் மீத்தேன் போன்ற மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. கடற்பரப்பில் படர்ந்துள்ள இந்த பாசியால், பவளப் பாறைகளுக்குக் கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் தடைபட்டு, கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

மேலும் இந்தச் சிக்கல் இனி கடற்கரை சார்ந்ததாக மட்டும் இருக்கப் போவதில்லை; ஒட்டுமொத்த பெருங்கடலின் சூழலியல் சமநிலையையும் பாதிக்கும் என்பதால், சர்வதேச அளவில் ஊட்டச்சத்துக்கள் கடலில் கலப்பதைத் தடுக்க உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.