மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா குறுகிய கால அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி, ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தவிர்க்க இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு, இந்த தற்காலிக விலக்கினை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவைச் சுட்டிக்காட்டி, நாட்டின் எரிசக்தி சுதந்திரம் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறியதாவது, “ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ள ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதற்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது ரஷியாவின் பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் பலன் தராது. இந்தியா எங்களது முக்கிய கூட்டாளியாக விளங்குவதாலும், முன்னதாக அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ரஷிய எரிபொருள் இறக்குமதியைக் குறைத்திருந்ததாலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அடங்கிய குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதே கருத்தை அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறையையும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டே இந்தத் தற்காலிக சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகள் நல்ல நடிகர்கள் என்றும் அவர்கள் எங்களுடைய முடிவை ஏற்றுக் கொண்டார்கள் எனவும் அதனால்தான் அனுமதி தந்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
