அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி தாக்குதலில் காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது 2வது மகனான 56 வயது முஜ்தபா காமேனி புதிய தலைவராக ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரான்-ஈராக் போரில் பங்கேற்ற அனுபவம் கொண்ட இவருக்குப் பாதுகாப்புப் படையினரிடையே பெரும் செல்வாக்கு உள்ளது.

தற்போது ஈரானிய ஊடகங்கள் இந்த மோதலை ரமலான் போர் என்று அழைத்து வரும் நிலையில் புதிய தலைவரை ரமலான் போரில் காயமடைந்த வீரர் எனக் குறிப்பிடுவதன் மூலம் அவர் காயமடைந்திருப்பதை அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஈரான் நாட்டின் ராணுவம் நீதித்துறை மற்றும் அரசியல் என அனைத்து விவகாரங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஈரான் அரசுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.

இவருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகவலை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்தாலும் அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ஈரானின் புதிய தலைமை இந்தச் சூழலை எப்படிக் கையாளப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இச்சம்பவம் காரணமாக வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.