இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர் லிங்க்ட்இன் பக்கத்தில் எழுதியுள்ள எதார்த்தமான பதிவு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு போன்ற பெருநகரங்களின் பகட்டான வாழ்க்கையையும், ஒரு சிறிய மலைக்கிராமத்து வாழ்க்கையையும் ஒப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அந்த வைரல் பதிவில், பெருநகரங்களில் பெரிய வீடு, கார் மற்றும் அனைத்து வசதிகளுடன் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மற்றவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போட்டி மனப்பான்மையால் பலரும் தனிமையிலும் மனச்சோர்விலும் தவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நேர்மாறாக, மலைப்பகுதியில் உள்ள சிறிய கிராமங்களில் குறைந்த வருமானம் மட்டுமே இருந்த போதிலும், மக்கள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்க்காமல் சிறிய விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் கண்டு மனநிறைவோடு வாழ்வதை அர்ஜவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் வாழும் சூழல்தான் நமது எண்ணங்களையும் வாழ்க்கைப் பார்வையையும் தீர்மானிக்கிறது என்ற உண்மையை உடைத்த இந்த பதிவு, சோஷியல் மீடியாவில் கார்ப்பரேட் ஊழியர்கள் பலரையும் தங்களது வாழ்க்கை முறை குறித்து யோசிக்க வைத்துள்ளது.
