இந்தியாவிலேயே மிகவும் கடினமான மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட அசாத்தியமான கேள்விக்குத் தேர்வர் ஒருவர் பயமின்றித் துணிச்சலாகப் பதிலளித்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முன்னாள் யுபிஎஸ்சி அதிகாரியான டாக்டர் தனு ஜெயின் நடத்திய மாதிரி நேர்காணலின் போது, “நீங்கள் திருமணம் செய்து கொண்ட குடும்பத்தில், சடங்குகளுக்காக உங்களை முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்வி ஒரு மாணவியிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்குச் சற்றும் பதற்றமடையாமல் பதிலளித்த அந்த மாணவி, “திருமணத்திற்கு முன்பு இதுகுறித்து பேசப்படாததால் நான் முக்காடு அணிய மாட்டேன் என்றும், எந்தவித தர்க்கமும் இல்லாத இத்தகைய பழக்கவழக்கங்களை ஒரு ஐஏஎஸ் தேர்வராக நான் பின்பற்றினால் அது சமூகத்திற்குத் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும் என்பதால், அப்படிப்பட்ட சடங்குகளில் என்னால் கலந்து கொள்ள முடியாது” என்றும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

புத்தக அறிவை மட்டும் சோதிக்காமல் ஒருவரின் ஆளுமையையும், தன்னம்பிக்கையையும் மதிப்பிடும் யுபிஎஸ்சி நேர்காணலில், இந்தத் தேர்வரின் துணிச்சலான மற்றும் எதார்த்தமான பதிலடி சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.