வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்கும் தனது நாட்டு வீரர்களுக்கு ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’ வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையற்ற வகையில் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் உரிமையாளர்கள், பிசிபி நிர்வாகத்தின் மீது இத்தகைய தீவிரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். போட்டிகள் தொடங்கவுள்ள கடைசி நேரத்தில், ஒவ்வொரு வீரருக்கும் தலா 25,000 டாலர்கள் கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பிசிபி மிரட்டுவதாகவும், இது ஒருவிதமான ‘கொள்ளையடிக்கும்’ செயல் என்றும் உரிமையாளர்கள் விமர்சித்துள்ளனர்.
அவசர நிலையில் வேறு வீரர்களை மாற்ற முடியாத சூழலைப் பயன்படுத்தி, பிசிபி இத்தகைய கட்டாய வசூலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட அணியிடம் நான்கு வீரர்களுக்காகத் தலா 25,000 டாலர் வீதம் பிசிபி வசூலித்ததாகவும், கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு வீரருக்கு இதேபோல் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த MLC உரிமையாளர்கள், இனிவரும் காலங்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணியில் சேர்க்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிசிபி தலைவரிடம் புகார் அளித்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
