நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இதனை தொடர்ந்து பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையிலேயே மெஹபூபா மாவட்டத்தில் வெளியான ஒரு வாக்காளர் பட்டியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்த்பூர் கிராம பஞ்சாயத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், வீட்டு எண் 803 என்ற ஒரே முகவரியில் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்கு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், அருகிலுள்ள பன்வாரி நகரத்தில் 996-ஆம் எண் வீட்டில் 243 பேரும், 997-ஆம் எண் வீட்டில் 185 பேரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடுகளில் பொதுவாக 5 முதல் 6 பேர் மட்டுமே வசித்து வருவதால், வாக்காளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பது சந்தேகத்திற்கிடமானதாக கூறப்படுகிறது.
தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சரிபார்த்தபோது இந்த பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது போல பல இடங்களிலும் இத்தகைய தவறுகள் இருப்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஆர்.பி. விஸ்வகர்மா விளக்கம் அளித்துள்ளார். “வாக்காளர்களின் பெயர்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும், முகவரி விவரங்களில் உள்ள தவறுகள் காரணமாகவே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட தவறுகளும், மக்கள் தெளிவாக தகவல்களை வழங்காததும்தான் காரணம். தற்போது அந்த பிழைகள் திருத்தப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார். ஆனால், இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, “இது திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி; ஜனநாயகத்தின் மீது நேரடியான தாக்கம் ஏற்படுத்தும்” எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
