தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதாகவும், ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர் சாடினார். விசிக மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் குறைந்த இடங்களை ஒதுக்கி திமுக அவர்களை அவமதித்துவிட்டதாகவும், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அதிகார மையங்களுக்கு முடிவுகட்டும் தேர்தலாக இது அமையும் என்றார்.
திமுக அரசு அளித்த 525 வாக்குறுதிகளில் கால்வாசியைக் கூட நிறைவேற்றாமல், 98% நிறைவேற்றிவிட்டதாகப் பொய் சொல்லி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பாதையில் அதிமுக பயணிப்பதாகவும், அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடர அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தின் கடன் சுமை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்துள்ளதாகச் சாடினார்.
முந்தைய ஆட்சிக்காலங்களில் ஒட்டுமொத்தமாக இருந்த கடனை விட, இந்த 5 ஆண்டுகளில் மட்டும் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், இது ஊழல் மற்றும் திட்டமின்மையால் ஏற்பட்டுள்ள சுமை என்றும் அவர் விளக்கினார்.
இவ்வளவு பெரிய கடனை மக்கள் எப்படித் திருப்பிச் செலுத்த முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், கடன் வாங்கும் இந்த அரசு தொடர வேண்டுமா என்று மக்களிடம் வினவினார்.
