ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரக்பூர், கியோன்ஜர், அங்குல், கோராபுட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மண்ணுக்குள் தங்க கனிமங்கள் இருப்பது இந்திய தொல்லியல் துறையின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மயூர்பன்ச், மல்கன்கிரி, சம்பல்பூர், பவுத் பகுதிகளில் ஆய்வு நடைபெற்று வருவதால், ஒடிசா தங்கச் சுரங்கமாக மாறும் நாள் அருகிலேயே இருக்கிறது. இந்த பகுதிகளில் மட்டும் 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 700-800 மெட்ரிக் டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. ஆனால் உள்நாட்டில் வருடத்திற்கு வெறும் 1.6 டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒடிசாவில் தங்க சுரங்கம் தொடங்கப்பட்டால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, இறக்குமதியில் பெரும் அளவில் குறைவு ஏற்படும். கடந்த மார்ச் மாதமே ஒடிசா சுரங்கத்துறை அமைச்சர் சட்டசபையில் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

முதல் கட்டமாக தியோகர் பகுதியில் தங்க சுரங்கத்தை ஏலம் விடும் பணிகளை ஒடிசா அரசு, ஒடிசா சுரங்க கார்ப்பரேஷன் மற்றும் இந்திய தொல்லியல் துறை விரைவுபடுத்தி வருகின்றன.

இதன்மூலம் தங்க உற்பத்தி மட்டுமல்லாது, போக்குவரத்து வசதிகள், அடிப்படை கட்டமைப்புகள் மேம்பட்டு, ஒடிசா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் பல மடங்கு உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.