கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பகிரப்பா (28) என்பவருக்கும், ராஜேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைப் பார்ப்பதற்காக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், அதற்கு பகிரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த பகிரப்பா, வீட்டில் இருந்த கயிற்றால் ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றியதுடன், தலைமறைவாக இருந்த பகிரப்பாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.