உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டியது அவசியமான ஒன்று என்ற நிலையில், அதனை மறுத்த உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள ‘கார்டன் கிரில்ஸ் 2.0’ என்ற உணவகத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்ற ஆகாஷ் சர்மா என்பவர், தாகத்திற்காக குடிநீர் கேட்டுள்ளார்.
ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் இலவசமாக தண்ணீர் தர மறுத்ததோடு, விலை கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு அவரைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இலவச குடிநீர் வழங்குவது விதிமுறை என்று அவர் சுட்டிக்காட்டியும் நிர்வாகம் அதனை ஏற்காததால், வேறு வழியின்றி 40 ரூபாய் கொடுத்து அவர் இரண்டு தண்ணீர் பாட்டில்களை வாங்கியுள்ளார்.
இந்த அநீதி குறித்து ஆகாஷ் சர்மா நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உணவகத்தின் இத்தகைய செயல் சேவை குறைபாடு என்றும் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.
இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மன உளைச்சலுக்காக 3,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவர் தண்ணீர் பாட்டிலுக்காக செலவழித்த 40 ரூபாயைத் திரும்ப வழங்கவும் உணவக நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
