தெலுங்கானா மாநிலத்தின் ஹனம்கொண்டா, காமரெட்டி மற்றும் ஜகித்யால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 900-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜகித்யால் மாவட்டத்தில் ஒரே குழியில் 300 நாய்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் பலியான நாய்களின் எண்ணிக்கை 900-ஐ எட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாய்களைக் கொன்று புதைப்பதற்காகவே பிரத்யேகமாக ஜேசிபி எந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டதும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உடல்கள் வீசப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருக்கும் காரணம் நாகரீக சமூகத்தையே தலைகுனிய வைத்துள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலின் போது, சில வேட்பாளர்கள் தங்களை வெற்றி பெறச் செய்தால் “தெருநாய் மற்றும் குரங்கு தொல்லை இல்லாத கிராமமாக மாற்றுவோம்” என்று விசித்திரமான வாக்குறுதியை அளித்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிறகு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கிராமத் தலைவர்களே கூலிப்படையினரை ஏவி இந்த வகைப்படியான படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்.

இது தொடர்பாக பல கிராமத் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறையாகக் கருத்தடை செய்து நாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதிகார வர்க்கமே சட்டத்தைக் கையில் எடுத்து ஊசி போட்டு நாய்களைக் கொன்றது பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.