சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது, கூட்டத்திலிருந்து வீசப்பட்ட செல்போன் அவரது முகத்தில் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறனை ஆதரித்து அண்ணாமலை நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றவாறு அவர் மக்களிடையே பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக மிகுதியால் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். அந்த சமயத்தில் கூட்டத்திலிருந்து மர்ம நபர் ஒருவர் வீசிய பூக்களோடு சேர்ந்து, ஒரு செல்போனும் அண்ணாமலையின் முகத்தில் வந்து பலமாகத் தாக்கியது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் ஒரு நிமிடம் நிலைகுலைந்தார்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டதால் அந்த இடமே போர்க்களமானது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பூக்களை வீசும்போது கையில் இருந்த செல்போன் தவறுதலாகப் பறந்து வந்ததா அல்லது யாராவது திட்டமிட்டு எறிந்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சலசலப்புகளுக்குப் பிறகு தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி என்பது வெறும் பேச்சுதான்; உண்மையில் இங்கு நடப்பது திமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்” என்றார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாகத் திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சராக இருந்தும் பெரியகருப்பன் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றும், மத்திய அரசின் நிதித் திட்டங்களை மாநில அரசு மறைப்பதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அண்ணாமலை மீது செல்போன் பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
Annamalai | BJP | Election Campaign | பறந்து வந்து அண்ணாமலை முகத்தில் பட்ட செல்போன்.. திடீர் பரபரப்பான பிரசாரம் #annamalai #BJP #electioncampaign #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection… pic.twitter.com/ojUippvHCQ
— Thanthi TV (@ThanthiTV) April 13, 2026
