தெலுங்கானா, ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (45) என்ற ஆட்டோ ஓட்டுநர், கோழிக்கறி சாப்பிடும் போது மூச்சுத்திணறி உயிரிழந்தார் என்ற துயரச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, சுரேந்தர் முன்னொரு நாளில் வீட்டிற்கு வரும் முன் சிக்கன் வாங்கி மனைவியிடம் கொடுத்து, கோழிக்கறி குழம்பு வைக்கச் சொல்கிறார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய அவர், அதிக பசியுடன் அவசர அவசரமாக சாப்பிட்டு வந்தபோது, கோழிக்கறியின் ஒரு துண்டு தவறுதலாக தொண்டையில் சிக்கிக்கொண்டது.

உணவுக்குழாய் வழியாகவும் அது இறங்காமல், வெளியே எடுக்கவும் முடியாத சூழல் ஏற்பட்டதால் அவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவ உதவி அளிக்க முயன்றபோதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுரேந்தரின் திடீர் மரணம் குடும்பத்தினரையும் கிராம மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது. இதே மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு நபர் முட்டை சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவசர அவசரமாக மாமிச உணவுகளை தின்றால் ஏற்படும் ஆபத்தை இந்த சம்பவங்கள் தெளிவாக நினைவூட்டுகின்றன.