உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வின் போது, கங்கை ஆற்றில் தவறி விழுந்து ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம், பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி, அருகில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3), ஹரித்வார் பகுதியில் கணேஷோத்சவம் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக, விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வில், ஒரு பக்தர் குழு கங்கை கரையில் வந்திருந்தது. அப்போது, நீல நிற தொப்பி அணிந்த ஒருவர், சிலையை நீரில் இறக்கும்போது திடீரென தவறி விழுந்தார். சக பக்தர்கள் அவரை கவனிக்காத நிலையில், பலத்த நீரோட்டம் அந்த நபரை அடித்துச் செல்லும் காட்சி வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், மீட்பு பணிகளை விரைந்து தொடங்கினர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த ஆண்டுகளிலும் நடந்துள்ளன. குறிப்பாக, 2023 அக்டோபரில், மத்தியப் பிரதேசம் சத்னா பகுதியில், துர்கை சிலையை கரைக்கும் போது, ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். அந்த இடம் முன்பே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.