சீனாவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்வதற்காக, ஆரோக்கியமான நபர்களை மனநல நோயாளிகளாகச் சித்தரித்து மருத்துவமனைகளில் அனுமதித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாடு தழுவிய விசாரணைக்குச் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹூபே மாகாணத்தில் உள்ள சில மனநல மருத்துவமனைகள், தேசிய மருத்துவக் காப்பீட்டு நிதியைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டதை ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ (SCMP) இதழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

அங்குள்ள மருத்துவமனைகள், மனநலப் பாதிப்பு இல்லாதவர்களிடம் “இலவச தங்குமிடம், இலவச உணவு” என ஆசை காட்டி அவர்களைத் தங்களது மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளன. பின்னர், அவர்களுக்கு “மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட மனநலக் குறைபாடு” என்பது போன்ற போலி மருத்துவச் சான்றிதழ்களைத் தயாரித்து, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளன.

ஒரு ரகசிய விசாரணையில் ஒரு நோயாளிக்கு வழங்கப்படாத சிகிச்சைகளுக்காக, நாள் ஒன்றுக்கு 130 யுவான் வரை போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு நோயாளிக்கு மாதம் 4,000 யுவான் (சுமார் ₹48,000) வரை காப்பீட்டுப் பணம் சுருட்டப்பட்டுள்ளது.

100 நோயாளிகளைக் கொண்ட ஒரு சிறிய மருத்துவமனை கூட, ஆண்டுக்குச் சுமார் 6 மில்லியன் யுவான் (சுமார் ₹7 கோடி) வரை மோசடி செய்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சியாங்யாங் நகரத்தில் உள்ள மனநல மருத்துவமனைகளில் பணியாற்றிய செவிலியர்கள் கூறுகையில், “இங்குள்ள பலருக்கு எந்த நோயும் இல்லை. முதியோர் இல்லங்களை விடக் கட்டணம் குறைவு என்பதால், முதியவர்களை அவர்களது உறவினர்கள் இங்குச் சேர்த்து விடுகின்றனர். அவர்களும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்குத் தங்கிக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

காப்பீட்டுப் பணத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்கள் அங்குச் சிறை போன்ற சூழலில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை ஊழியர்களின் பேச்சைக் கேட்காதவர்கள் மற்றும் தப்பிக்க முயல்பவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், கயிற்றால் கட்டி வைத்துச் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் சீனாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு நிர்வாகம் (NHSA) அனைத்து மாகாணங்களிலும் உள்ள மனநல மருத்துவமனைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.