தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், அது திட்டமிட்ட ‘காவல் மரணம்’ (Custody Death) என்பதை சிபிஐ (CBI) தற்போது மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா என்பவர் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது என்றும் சிபிஐ தனது விசாரணை அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆதாரமற்ற மற்றும் பொய்யான ஒரு புகாரின் அடிப்படையில், ஒரு அப்பாவி இளைஞரைச் சட்டவிரோதமாகக் காவலில் எடுத்து போலீஸார் சித்திரவதை செய்திருப்பது இந்த அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ​சிபிஐ-யின் இந்த அதிரடித் தகவலைக் கேட்ட நீதிபதிகள், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துத் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

“ஒன்றுமே இல்லாத ஒரு புகாருக்காக ஒரு மனிதரை அடித்துக் கொலை செய்வதா?” என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட போலீஸார் அனைவரும் சிறையில் இருக்க வேண்டும் என்று காட்டமாகக் கூறியுள்ளது. ஒரு நேர்மையான இளைஞரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதும், அதற்குப் பொறுப்பானவர்கள் காவலர்களே என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.