ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கௌசர் பஷர் அல்-ஹுசைவி என்ற சிறுமிக்கு, அவளது 13 வயதிலேயே பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டு, குடிகாரர் ஒருவருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஓராண்டு காலம் கொடுமைகளை அனுபவித்து, தற்கொலை மிரட்டலுக்குப் பிறகு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற அந்தச் சிறுமிக்கு, மீண்டும் ஒரு போதைப்பொருள் கடத்தல் காரரான அவளது உறவினர் மகனுடன் திருமணம் செய்ய குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.

இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்காத அச்சிறுமி கடந்த மே மாத தொடக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், வழியில் அண்டை வீட்டார் ஒருவரால் கடத்தப்பட்டு 3 நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானார். பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி, தான் கடத்தப்பட்டதற்கான சிசிடிவி ஆதாரங்களை காட்டியும், குடும்பத்தினரும் கபிலா (பழங்குடி) அமைப்பினரும் அதனை ஏற்கவில்லை. மாறாக, கௌரவக் கொலை என்ற பெயரில் அச்சிறு மியை காரில் கடத்திச் சென்று, பாக்தாத்தின் ஒதுக்குப்புறமான மைதானத்தில் வைத்து 10 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும், கோடாரியால் தலையைத் துண்டித்து, எந்தவொரு இறுதிச் சடங்கும் இன்றி உடலைக் குழியில் வீசிச் சென்றுள்ளனர்.

இந்தக் கொடூரக் கொலையை விடவும் உச்சகட்ட கொடுமையாக, சிறுமியின் மரணத்தை அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கபிலா அமைப்பினரும் வீதிகளில் இறங்கி, மேள தாளங்களுடன் நடனமாடி திருவிழா போலக் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலையையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுரிமை ஆர்வலர்கள் பலரும் இக்கொடூரத்திற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி சர்வதேச அளவில் குரல் எழுப்பி வருகின்றனர்.