70 ஆண்டுகள் பழமையான ITPA எனப்படும் ‘ immoral டிராபிக் தடுப்புச் சட்டத்தை’ பகுப்பாய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், வயது வந்த நபர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை ஒடுக்க காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கவில்லை என்றும், ஏனெனில் சுயவிருப்பத்தின் பேரில் இத்தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமானது அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், விபச்சார விடுதி நடத்துவது மட்டுமே சட்டவிரோதம் என்றும், காவல்துறையினர் நடத்தும் சோதனைகளின் போது மீட்கப்படும் வயது வந்த பாலியல் தொழிலாளர்களைக் குற்றவாளிகளாகக் கருதி துன்புறுத்தவோ அல்லது காவலில் எடுக்கவோ கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், சுயவிருப்பத்துடன் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களை ‘மீட்பது’ என்ற கேள்வியே எழாது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், எந்தவொரு பாலியல் தொழிலாளியையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தி மறுவாழ்வு முகாம்களில் அடைக்கக் கூடாது என்றும், மறுவாழ்வு என்பது அவர்களின் முழுச் சம்மதத்துடனான ஒரு தன்னார்வச் செயலாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மறுவாழ்வுக்கான ஆதரவை வழங்க வேண்டியது அரசின் கடமையே தவிர, ஒரு பெண்ணின் சுதந்திரத்தைப் பறித்து அதை அவர் மீது திணிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியான பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான வழக்கில், மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட் சமர்ப்பித்த ‘பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டத்தை’ ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்களை வெறும் மீட்புப் பொருளாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், அவர்களின் தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் சுயமரியாதைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடும் அனைவரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் கடத்தப்பட்டவர்கள், மிரட்டப்பட்டவர்கள் மற்றும் சுயவிருப்பத்துடன் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு இடையேயான வித்தியாசங்களை உணர்ந்து, தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில் மட்டுமே இனி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
