செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தபோது, வேலைகள் எளிதாகும் என்றும் ஊழியர்களின் வேலைப்பளு குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், ஏ.ஐ மனிதர்களின் வேலைகளை பறித்துவிடுமோ என்ற அச்சமும் தொழில்நுட்பத் துறையில் இருந்தது. ஆனால், இப்போது இதற்கு மாறாக ஏ.ஐ காரணமாகவே வேலைக்கான எதிர்பார்ப்பும் அழுத்தமும் அதிகரித்துள்ளதாக ஒரு பெங்களூரு தொழில்நுட்ப ஊழியர் கூறியிருப்பது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர் ரூபாலி திவாரி, சமூக வலைதளத்தில் பகிர்ந்த காணொலியில், முன்பு ஒருவருக்கு சுமார் 5 பணிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதே நேரத்தில் 20 முதல் 25 பணிகளை முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏ.ஐ உதவியுடன் வேலை வேகமாக முடிக்க முடிகிறது என்பதால், ஊழியர்களிடம் நிறுவனங்கள் இன்னும் அதிக பணிகளை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக தனது நண்பர் ஒருவரை குறிப்பிட்ட அவர், பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியர் ஒரே நேரத்தில் சுமார் 10 திட்டங்களை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். குறியீடு எழுதுவது, அதை பரிசோதிப்பது, மதிப்பாய்வு செய்வது, செயல்படுத்துவது என பல பணிகளையும் ஒருவரே மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார். முன்பு இதே அளவிலான பணிகளுக்கு ஒரு குழு தேவைப்பட்ட நிலையில், ஏ.ஐ கருவிகள் இருப்பதால் ஒரே ஊழியரிடம் அதிக பொறுப்புகளை ஒப்படைக்கும் போக்கு உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாலியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஐ உண்மையில் வேலைகளை எளிதாக்குகிறதா அல்லது ஊழியர்களிடமிருந்து குறுகிய காலத்தில் அதிக உற்பத்தித்திறனை எதிர்பார்க்கும் சூழலை உருவாக்குகிறதா என்பதே தற்போது எழும் கேள்வியாக உள்ளது. இருப்பினும், இது ஒரு தொழில்நுட்ப ஊழியர் பகிர்ந்த அனுபவம் என்பதால், இதையே முழுத் தொழில்துறையின் நிலை என்று பொதுமைப்படுத்த முடியாது.
