இந்தியாவில் சிம் கார்டு வழங்குவதற்கான விதிமுறைகளில் ஆகஸ்ட் 24 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. தொலைத்தொடர்புத் துறையின் புதிய வழிகாட்டுதலின்படி, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான சிம்கள் ஒருவரின் பெயரில் செயல்பாட்டில் இருந்தால், அவருக்கு புதிதாக மொபைல் இணைப்பு வழங்குவதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறுக்க வேண்டும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு நபரின் பெயரில் அதிகபட்சம் 9 மொபைல் இணைப்புகள் இருக்கலாம். ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த வரம்பு 6 இணைப்புகளாக உள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கானது அல்ல; வெவ்வேறு நிறுவனங்களின் சிம்கள் அனைத்தும் சேர்த்தே கணக்கிடப்படும்.

புதிய நடைமுறையில், ஏற்கெனவே வரம்பை எட்டியுள்ள வாடிக்கையாளர்களை அடையாளம் காண டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தின் உதவியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒருவரின் பெயரில் வரம்பைத் தாண்டி இணைப்பு செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால், கூடுதலாக வழங்கப்பட்ட இணைப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

உங்கள் பெயரில் எத்தனை சிம்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதை முன்கூட்டியே சரிபார்ப்பது முக்கியம். இதற்காக அரசின் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் உள்ள “உங்கள் பெயரில் உள்ள மொபைல் இணைப்பை அறிய” என்ற வசதியைப் பயன்படுத்தலாம். மொபைல் எண்ணை உள்ளிட்டு, குறுஞ்செய்தி மூலம் வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பதிவு செய்த பிறகு, உங்கள் பெயரில் உள்ள இணைப்புகளைப் பார்க்க முடியும். பயன்படுத்தாத எண்கள் அல்லது உங்களுக்குத் தெரியாத எண்கள் இருந்தால், அவற்றைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம்.