கிரிக்கெட் களத்தில் அவ்வப்போது அரங்கேறும் சில சுவாரசியமான தருங்கங்கள் ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், விமன்ஸ் டெல்லி பிரீமியர் லீக் 2026 தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் மற்றும் சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலின் போது நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டியின் போது ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் வீராங்கனை பாரதி ராவல், சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணியின் பேட்டரான மேதாவி பிதுரியை  அவுட் ஆக்கினார். பேட்டரை வீழ்த்திய மகிழ்ச்சியில், பாரதி ராவல் உடனடியாக மேதாவியின் பிரபல ‘6-7’ (சிக்ஸ் – செவன்) கொண்டாட்டத்தை அப்படியே காப்பியடித்து நக்கல் செய்யும் விதமாகச் செய்தார்.

முன்னதாக இதே ‘6-7’ கொண்டாட்டத்தின் மூலம் இணையத்தில் வைரலாகியிருந்த மேதாவி பிதுரி, இந்த முறை அதே கொண்டாட்டத்திற்குத் தானே இலக்காகி நின்றது அதிர வைத்தது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் ‘யுனோ ரிவர்ஸ்’ தருணமாக வர்ணிக்கப்படுகிறது.

 

இந்த ‘6-7’ கொண்டாட்டம் என்பது இரு கைகளையும் முன்னும் பின்னுமாக ஊசலாடும் பாணியில் அசைத்துக்கொண்டே “சிக்ஸ்-செவன்” என்று கூறுவதாகும். இதற்கு தனியாக எந்த அர்த்தமும் இல்லை என்றாலும், ஜென் இசட் (Gen Z) மற்றும் ஜென் ஆல்பா (Gen Alpha) தலைமுறையினர் மத்தியில் இது மிகப்பெரிய இன்டர்நெட் மீமாக மாறியுள்ளது. விளையாட்டு உலகத்திலும் இதன் தாக்கம் அதிகம் உள்ளது.

இந்த ஆட்டத்தில் 20 வயதான வைரல் சென்சேஷனான மேதாவி பிதுரி வெறும் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். ஆனால் பாரதி ராவல் பந்துவீச்சில் கலக்கினார். மேலும் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயல்பட்ட ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அணியின் பந்துவீச்சில் பூர்வா சிவாக் தனித்து நின்றாலும், பாரதி ராவல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பக்கபலமாக இருந்தார்.