தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ‘ராகிங் ஸ்டார்’ யஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘டாக்சிக்’  திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் யஷ் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், இந்தத் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விதமாக சிறிய விபத்து ஏற்பட்டு 4 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது அதே நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும், யஷ்க்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பு முற்றிலும் தனித்துவமானது. இதற்குச் சான்றாக தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், மேடையில் அமர்ந்திருக்கும் நடிகர் யஷை நோக்கி, ஒரு தீவிர ரசிகர் திடீரென்று மின்னல் வேகத்தில் ஓடிவந்து அவரது காலடியில் அமர்கிறார். அதைக் கவனித்த யஷின் பாதுகாப்புப் படையினர்  உடனடியாக அந்த நபரை இழுத்து வெளியேற்ற முயன்றனர். ஆனால், அந்த ரசிகரோ அங்கிருந்து நகர மறுத்து யஷுடனேயே ஒட்டிக்கொண்டார்.

 

பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த ரசிகரை அப்புறப்படுத்த முயன்ற போதிலும், நடிகர் யஷ் தனது வழக்கமான பணிவுடன் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். மேலும், அந்த ரசிகரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருடன் புகைப்படம் எடுக்கவும் அனுமதி அளித்தார். அதன் பிறகே அந்த ரசிகர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றார். யஷின் இந்த எளிமையான மற்றும் மனிதநேயமிக்க செயலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவருக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர். “உண்மையான சூப்பர் ஸ்டார் தன் ரசிகர்களை ஒருபோதும் வெறுப்பதில்லை, இதயத்தில் வைத்துக் கொண்டாடுவார்” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வரும் ஆகஸ்ட் 26, 2026 அன்று வெளியாகவுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.