டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய கேப் டிரைவரை வெறும் 7 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்தனர். சிறுமி காணாமல் போனதும் அவரது தந்தை நினைவில் வைத்திருந்த ஒரு மங்கலான வெள்ளை நிற கார் படம் மற்றும் மகளின் அலறல் சத்தம் மட்டுமே முக்கிய தடயங்களாக இருந்தன.

இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகள், ஜிபிஎஸ் தகவல்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை ஆய்வு செய்து சந்தேக நபரை அடையாளம் கண்டனர். விசாரணையில், குற்றவாளி தனது வாகனத்தின் வழித்தடத்தை மாற்றியிருந்தது போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது. டிஜிட்டல் தரவுகள் மூலம் அவரது பயணத்தை முழுமையாக கண்காணித்த போலீசார், தப்பிச் செல்ல முயன்ற அவரை மடக்கிப் பிடித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கேப் டிரைவர் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தந்தையின் கூர்மையான நினைவாற்றலும், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களும் இணைந்து, மிகக் குறுகிய நேரத்தில் கொடூர குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்திய சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.