பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசாமி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தர்ஷனுக்கு எதிராக அவரது நெருங்கிய நண்பர் பிரதோஷ் அரசு தரப்பு சாட்சியாக  மாற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுப் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 14-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட தர்ஷனின் நண்பர் பிரதோஷ், தன்னை அரசு சாட்சியாக ஏற்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பெங்களூரு 59-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சுஜாதா, பிரதோஷ் அரசு தரப்பு சாட்சியாக மாற நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி விதித்த நிபந்தனைகளின்படி, தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற வேண்டும்; தவறான தகவல் அளித்தால் மீண்டும் குற்றவாளியாகக் கருதப்பட்டு தண்டனைக்கு உள்ளாக நேரிடும். மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை அவர் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதோஷ் அரசு தரப்பு சாட்சியாக மாறியதன் மூலம் அவர் அளிக்கும் வாக்குமூலம் இந்த வழக்கில் மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா உட்பட வழக்கில் தொடர்புடைய மற்ற 16 பேருக்கும் பெரும் சட்டப் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.