திடீரென தலைசுற்றல், மயக்கம், கண் இருட்டுவது மற்றும் உடல் பலவீனம் போன்றவை குறைந்த ரத்த அழுத்தத்தின்  முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். இத்தகைய சூழலில் உடனே ஒரு கப் காபி குடித்தால் சரியாகிவிடும் என்று பலரும் நம்புகின்றனர். காபியில் உள்ள கஃபீன் நரம்பு மண்டலத்தைத் தூண்டி, தற்காலிகமாக ரத்த அழுத்தத்தை உயர்த்தினாலும், இது அனைவருக்குமான நிரந்தரத் தீர்வு அல்ல என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

உடலில் நீர்ச்சத்து குறைவது, நீண்ட நேரம் உணவில்லாமல் இருப்பது, அதிக வெப்பம் அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் ரத்த அழுத்தம் குறையலாம். தினமும் காபி குடிப்பவர்களுக்கு அதன் தாக்கம் பெரிதாகத் தெரியாது. மேலும், நீரிழப்பு அல்லது இரத்த சோகையால் மயக்கம் வரும்போது, காபியை விடத் தண்ணீரும் எலக்ட்ரோலைட் பானங்களுமே உடலுக்கு உடனடி நன்மையைத் தரும்.

குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருக்காமல் இருப்பது மற்றும் திடீரெனப் படுக்கையிலிருந்து எழாமல் மெதுவாக எழுவது போன்ற எளிய பழக்கங்களைப் பின்பற்றலாம். இருப்பினும், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி காபியைச் சுய சிகிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது.

அடிக்கடி மயக்கம் வருவது, நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் அல்லது கடுமையான பலவீனம் போன்றவை இருந்தால் வீட்டிலேயே சிகிச்சை செய்வதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். உடலின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதே நீண்டகால உடல்நலத்திற்குப் பாதுகாப்பானது.