நடைபாண்டில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மலைப்பொழிவு இல்லாததால் பெங்களூரு நகருக்கு தேவையான நீரை வழங்குவதற்கு பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் சிரமத்தில் இருந்து வருகின்றது. கடும் பற்றாக்குறையால் டேங்கர் லாரிக்கான கட்டணத்தையும் அரசு புதிதாக நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி குறிப்பிட்ட அளவு, தூரத்தை கணக்கிட்டு டேங்கர் லாரிக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாத காலத்திற்கு 200 தனியார் டேங்கர் லாரிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் டேங்கர் லாரி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
அதனைப் போலவே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தோட்டம் அமைத்தல், கட்டுமானம், பராமரிப்பு மற்றும் வாகனம் கழுவுதல் ஆகியவற்றுக்கு குடிநீரை பயன்படுத்துவோருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் கூடுதலாக 500 ரூபாய் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.