அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் மழை பாதிப்படைந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. சென்னையில் இயல்பான அளவில்தான் மழை பெய்துள்ளது. திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

பல விவசாயிகளை பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்கவில்லை. மேலும் இதன் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர் என்று கூறினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில் உதயநிதி ஸ்டாலினும் அங்கு ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று நாளை முதல்வர் ஸ்டாலினும் விழுப்புரத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.