உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் ஏஐ தொழில்நுட்பம் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று 15 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் கூகுளின் முன்னாள் சிஇஓ உட்பட 200 முன்னணி விஞ்ஞானிகள் உலக நாடுகளுக்கு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை பெருநிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

“நாம் இப்போதே செயல்பட வேண்டும்” என்ற தலைப்பில் நிபுணர்கள் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கையில், இந்த முறை ஏஐ தொழில்நுட்பத்தின் நேரடித்தாக்குதல் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மீது இருக்காது என்றும், மாறாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கணினிகளில் பணிபுரியும் ‘வெள்ளை காலர்’ ஊழியர்களான தரவு உள்ளீடு, வாடிக்கையாளர் சேவை, உள்ளடக்க எழுத்து, அடிப்படைக் கணினி நிரலாக்கம் மற்றும் நிதிப் பகுப்பாய்வு போன்ற பணிகளைச் செய்பவர்களின் வேலைகளுக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனித வரலாற்றிலேயே மிக வேகமாக மாறிவரும் இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தால் அடுத்த 10 ஆண்டுகள் மிகக் கடினமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டான்ஃபோர்ட் மற்றும் எம்ஐடி அறிஞர்கள்,மனிதர்களை முழுமையாக மாற்றுவதற்குப் பதிலாக அவர்களின் வேலைத் திறனை மேம்படுத்தும் உதவியாளராக மட்டுமே ஏஐ அமைப்புகளை உருவாக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை அரசாங்கங்கள் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தையே உலுக்கக் கூடிய இந்த விபரீத எச்சரிக்கை, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.