மத்தியப் பிரதேச மாநிலம், டீக்கம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிடெஹரி கிராமத்தில், அரசு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட கோதுமை மூட்டைக்குள் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் வாங்கச் சென்ற கோமல் லோதி என்பவர், வீட்டிற்குச் சென்று மூட்டையைப் பிரித்தபோது, கோதுமைக்கு நடுவே மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

இந்த ரேஷன் பொருட்கள் விதிசா மாவட்டத்திலுள்ள ‘சங்கல்ப்’ கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்துப் புகாரளித்த கிராம மக்கள், ரேஷன் கடையில் திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏழைகளின் உயிருடன் விளையாடுவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், இதற்குத் காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தைத்தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரேஷன் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட கோதுமை மூட்டைகள் அனைத்தும் மீண்டும் கிடங்கிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் முறையாகச் செய்யப்படாமல் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது, அரசு கிடங்குகளின் அவலநிலையை அம்பலப்படுத்தியுள்ளது.