மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மிஷா என்பவர் நீண்ட நாட்களாகத் தீராத இருமல் மற்றும் கடுமையான உடல் எடை குறைவு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் சாதாரண பாதிப்பு என நினைத்து அவருக்கு பல்வேறு மருத்துவர்கள் காசநோய் மற்றும் ஆஸ்துமாவுக்கான தொடர் சிகிச்சைகளைக் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எத்தகைய மருத்துவமும் பலனளிக்காத நிலையில், நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வந்ததால் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் சிறுமிக்குச் சிறப்பு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அந்தப் பரிசோதனை முடிவுகளை வைத்து மருத்துவர்கள் ஆய்வு செய்தபோதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது, அந்தச் சிறுமியின் நுரையீரலுக்குள் சுமார் 7 ஆண்டுகளாக ஒரு பிளாஸ்டிக் பேனா மூடி சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் மிரண்டு போகச் செய்தது.
காலப்போக்கில் அது நுரையீரலில் நிரந்தரமாக மாட்டிக்கொண்டு மூச்சுக்குழாய்ப் பாதையை அடைத்ததே தொடர் இருமலுக்கும் உடல் எடை குறைவுக்கும் உண்மையான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக நவீன மருத்துவ முறையான பிராங்கோஸ்கோபி கருவியைப் பயன்படுத்தி அந்தப் பேனா மூடியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள், குறித்த நேரத்தில் சரியான சிகிச்சையளித்துச் சிறுமியின் உயிரைக் காப்பாற்றி நிம்மதியளித்துள்ளனர்.
