விண்வெளியில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், சீன விண்வெளி வீரர்கள் தங்கள் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் கோழி இறைச்சிகளைச் சமைத்து ‘ஜீரோ ஈர்ப்பு பார்பிக்யூ’ என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக, விண்வெளி வீரர்கள் ஒரே மாதிரியான, ஒட்டும் தன்மை கொண்ட, உறைந்த உணவுகளையே உட்கொள்வது வழக்கம்.

 

ஆனால், இப்போது, விண்வெளி தொழில்நுட்பம் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டும் வகையில், ஷென்ஜோ-21 திட்டத்தின் கீழ், தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு சிறப்பு அடுப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த அடுப்பைப் பயன்படுத்தி, வீரர்கள் பொன்னிறமான சிக்கன் விங்ஸ் மற்றும் ஸ்டீக்ஸ் போன்றவற்றைச் சமைத்து மகிழ்ச்சியுடன் உண்பதைக் காட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

விண்வெளியில் பயன்படுத்தப்படும் இந்தச் சமையல் அடுப்பு சாதாரணமானதல்ல. ஜீரோ ஈர்ப்புச் சவால்களை மனதில் வைத்து, இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனா விண்வெளி வீரர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜுவான் யாங் கூறுகையில், இந்த அடுப்பு சிறப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், புகை துளியும் வெளியேறாது என்றும், இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வீரர்கள் சமைக்கும்போது, அடுப்பின் வெளிப்புறப் பகுதி தொடக்கூடிய அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கும்படியும், அவர்களுக்குச் சூடு பிடிக்காதவாறு தடுக்கும்படியும் இந்த அடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் புதிதாகவும், சுவையாகவும் உணவருந்துவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது, இது விண்வெளிப் பயணங்களில் ஒரு புதிய மைல்கல் ஆகும்.