அல்பேனியா – கிரீஸ் எல்லைக்கு அருகேயுள்ள ஒரு இருண்ட கந்தகக் குகைக்குள் விஞ்ஞானிகள், உலகிலேயே மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். 1,140 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வலைக்குள், 69,000 வீட்டுச் சிலந்திகள் மற்றும் 42,000 குள்ள சிலந்திகள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிலந்திகள் ஒன்றாகக் கூடி வாழ்வது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகத் தனித்து வாழும் பழக்கத்தைக் கொண்ட இந்த இரண்டு வகைச் சிலந்திகளும், சூரிய ஒளியே இல்லாத மற்றும் விஷத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் சல்ஃபர் வாயு நிறைந்த சூழலில், கூட்டாகக் கூடி வலை பின்னி வாழ்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சிலந்திகள், குகைக்குள் இருக்கும் கந்தகத்தை உண்ணும் நுண்ணுயிரிகளால் வளரும் சிறிய பூச்சிகளை உணவாகக் கொண்டு வாழ்கின்றன. குகைக்கு வெளியே வாழும் அதே இனத்தைச் சேர்ந்த சிலந்திகளை விட, குகைச் சிலந்திகளின் மரபணு மற்றும் உடல்ரீதியான குணங்கள் மாற்றம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவை இருண்ட சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொண்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.