சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். சிலர் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் ஊத்துக்குளி காடு பகுதியில் வசிக்கும் முருகன்(40) என்பவர் கதவணை பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் டெட்டனேட்டர் என்ற வெடி உபயோகப்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து பெட்டனேட்டரை தண்ணீரில் தூக்கி வீசியபோது காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் உடல் சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் குமார்(22) என்பது தெரியவந்தது.

இவர் ஆணைபுலிகாடு பகுதியில் வசிக்கும் உறவினரான மாதையன் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ளார். பின்னர் மோகன் குமார் தனது நண்பரான பூபதியுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வெடிப்பொருள் வெடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.