சேலம் மாவட்டத்தில் உள்ள சேசன்சாவடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமுருகன்(11), கவின்(2) என்ற இரண்டு மகன்களும், யாழினி(7) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த கவின் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமியின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பழனியம்மாள்(34) என்பவருடன் குழந்தையை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பழனியம்மாளை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தியதை பழனியம்மாள் ஒப்புக்கொண்டார்.

அவர் கடத்தப்பட்ட குழந்தையை சேலம் 5 ரோடு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டில் விட்டு வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு மாலை 4 மணி அளவில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவரை பிரிந்து வாழும் பழனியம்மாளுக்கு 16 வயதில் மகளும், 14 வயதில் மகனும் இருக்கின்றனர்.

அவர் கவினை கடத்தி சேலத்திற்கு கொண்டு சென்று உறவினர் வீட்டில் விட்டுள்ளார். அப்போது கவினை தன் குழந்தை எனவும், துக்க வீட்டிற்கு சென்று வரும் வரை குழந்தை இங்கேயே இருக்கட்டும் என உறவினரிடம் கூறிவிட்டு மீண்டும் சேசன்சாவடி பகுதிக்கு வந்து ஒன்றும் தெரியாதவர் போல நாடகமாடியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை காணாமல் போன 7 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.