
மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகர் பகுதியில் ராம்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் அருகில் உள்ள பள்ளியில் பியூனாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநராக ஆசைப்பட்ட ராம் தாஸ் வீட்டின் வருமானம் பற்றாக்குறை காரணத்தால் பிஏ படித்து முடித்தார்.
அதன் பிறகு அவரால் மேற்ப்படிப்பினை தொடர முடியவில்லை. இதனால் பகலில் பானி பூரி விற்றுவிட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்தார். டிரோராவில் அமைந்துள்ள தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்த அவர் அங்குள்ள நீர் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் எரிவாயு பராமரிப்பு போன்றவற்றில் பல தொழில் நுணுக்கங்களை வளர்த்துக் கொண்டார்.
அந்த சமயத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பயிற்சி பகுதிகளுக்கான ஆட்சேர்ப்பு நடந்தது. இதனை அறிந்த ராம்தாஸ் அதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்ச்சியானார். அதன் பின் ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்காக அழைக்கப்பட்டார். அதில் கலந்து கொண்ட அவர் தேர்ச்சி பெற்ற நிலையில் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் சேர்க்கை கடிதம் கடந்த மே 2025, அன்று அவரது வீடு தேடி வந்தது.
தற்போது பானி பூரி விற்று வந்த ராம்தாஸ் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மையத்தில் பம்ப் ஆப்ரேட்டர்-கம்-மெக்கானிக்காக பணியாற்றுகிறார். மேலும் பானி பூரி விற்று வந்தவர் தொழில்நுட்ப வல்லுநராக வளர்ச்சி அடைந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.