விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அது நீடிக்க வேண்டும் என்றில்லை.

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதையே நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

அதுதான் தமிழக மக்களின் நலனுக்கான சரியான அணுகுமுறை. அதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கம். பாஜக திமுகவோடு நெருங்கி விடக்கூடாது. நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது.

திமுக மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும்போது அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும். ஆனால் திமுக மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக விமர்சனத்தை முன் வைக்கிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.