
சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு தெருவின் நகர் 7வது தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (42). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர் கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க ராஜன் சென்றிருந்தார். அப்போது தனது புகாரை காவல்துறையினர் ஏற்கவில்லை என்றும், மேலும் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் காவல் நிலையம் முன்பே உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி வைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த அவரை காவல்துறையினர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர், இந்த விசாரணையில் ராஜன் கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் இரும்பு பட்டறை சொந்தமாக வைத்து நடத்தி வந்தது தெரிய வந்தது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கூலி வேலைக்கு ஒரு கம்பெனியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருடன் பணிபுரியும் சக தொழிலாளி மாதவன் என்பவருடன் தகராறு நடந்துள்ளது. இதில் மாதவன் மற்றும் அவரது நண்பர் அருண்குமார் ஆகியோர் ராஜனை அடித்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ராஜன், மாதவன் மற்றும் அவரது நண்பர் அருண்குமார் ஆகியோர் மீது புகார் அளிக்க ஆர்.கே நகர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். காவல்துறையினர் அவரை புகாரை எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் தன்னுடைய புகாரை ஏற்கவில்லை என மன வேதனையில் ராஜன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ராஜனின் புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மாதவனின் நண்பர் அருண்குமாரை (26) கைது செய்தனர். ஆனால் மாதவன் தலைமறைவாகிவிட்டார். எனவே காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜார்ஜ் டவுன் 15 வது நீதிமன்ற நடுவர் பிரான்சிஸ் சாமுவேல் ராஜனிடம், ராஜன் தனது மரண வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜன் நேற்று மாலை திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.